பூராடம் (பஞ்சாங்கம்)

தமிழர்விக்கியிலிருந்து
(பூராடம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

பூராடம் என்பது இந்திய வானியலிலும் சோதிடத்திலும் இராசிச் சக்கரத்தில் சொல்லப்படுகின்ற இருபத்தேழு நட்சத்திரக் கோணப் பிரிவுகளுள் 20 ஆவது பிரிவு ஆகும். இந்தியப் பஞ்சாங்க முறையில் சந்திரன் புவியைச் சுற்றி வரும்போது பூராட நட்சத்திரக் கோணப் பிரிவுக்குள் இருக்கும் காலம் பூராட நட்சத்திரத்துக்கு உரிய காலம் ஆகும். இந்திய சோதிடத்தின்படி, இந்தக் காலப் பகுதியில் பிறக்கும் ஒருவருடைய "பிறந்த நட்சத்திரம்" அல்லது "ஜன்ம நட்சத்திரம்" பூராடம் ஆகும்.

ஒவ்வொரு நட்சத்திரப் பிரிவும் 13° 20' அளவு கொண்டதாக இருப்பதால், இருபதாவது நட்சத்திரமாகிய பூராடம் 253° 20'க்கும் 266° 40'க்கும் இடையில் அமைந்துள்ளது.[1] இந்தப் பிரிவு 3° 20' அளவு கொண்ட நான்கு சமமான பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப்பிரிவுகள் பூராட நட்சத்திரத்தின் முதலாம், இரண்டாம், மூன்றாம், நான்காம் பாதங்கள் எனப்படுகின்றன. இந்த நட்சத்திரம் முழுமையாக தனுசு இராசியில் அமைந்துள்ளது.

பெயரும் அடையாளக் குறியீடும்

படிமம்:Sagittarius constellation map.png
தனு விண்மீன் கூட்டம்

இந்திய வானியலிலும் சோதிடத்திலும் நட்சத்திரப் பிரிவுகளுக்குரிய பெயர்கள் அவ்வப் பிரிவுகளில் காணும் முக்கியமான விண்மீன்கள் (நட்சத்திரம்) அல்லது விண்மீன் கூட்டங்களைத் தழுவி இடப்பட்டவை. இதன்படி பூராட நட்சத்திரப் பிரிவின் பெயர் அப்பிரிவுக்குள் காணப்படும் தனு விண்மீன் கூட்டத்தில் காணப்படும் இரண்டு நட்சத்திரங்களைக் கொண்ட பூராடத்தின் (δ மற்றும் ε சாகிட்டேரீ) பெயரைத் தழுவியது. பூராடத்தின் சமசுக்கிருதப் பெயரான பூர்வ ஆஷாட (Purva Ashadha) என்பது "தொடக்க வெற்றி" அல்லது "வெல்ல முடியாதது" என்னும் பொருள் கொண்டது. இதன் அடையாளக் குறியீடு "விசிறி" அல்லது "முறம்" ஆகும்.

சோதிடத்தில் பூராடம்

இயல்புகள்

இந்தியச் சோதிட நூல்கள் நட்சத்திரங்களோடு தொடர்புடையவையாகக் கருதப்படும் இயல்புகளைத் தேவதைகள், கோள்கள், விலங்குகள், பறவைகள், மரங்கள், இயற்கை மூலங்கள், சாதி, பால் போன்றவற்றின் மூலம் குறித்துக் காட்டுகின்றன. பூராட நட்சத்திரத்துக்குரிய மேற்படி இயல்புகள் பின்வருமாறு:[2][3]

கோள் வெள்ளி
தேவதை அபசு/ வருணன்
தன்மை உக்கிரம்
சாதி சத்திரிய சாதி
கோத்திரம் புலத்தியர்
பால் பெண்
குணம் மனித குணம்
இயற்கை மூலம் வாயு
விலங்கு ஆண் குரங்கு
பறவை பகண்டை
மரம் வஞ்சி
நாடி சுழுமுனை

குறிப்புகள்

  1. Raman, B. V., 1992. பக். 40.
  2. வெங்கடேச ஐயர், இ., 2012. பக். 24.
  3. Harness, Dennis M., Masco, Maire M., The Nakshatras of Vedic Astrology: Ancient & Contemporary Usage பரணிடப்பட்டது 2012-05-26 at the வந்தவழி இயந்திரம்.

உசாத்துணைகள்

இவற்றையும் பார்க்கவும்

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=பூராடம்_(பஞ்சாங்கம்)&oldid=446519" இலிருந்து மீள்விக்கப்பட்டது