ஔலிகாரர்கள்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search

நாடுமாள்வா இராச்சியம்
விருதுப்
பெயர்கள்
மாள்வாவின் மகாராஜா
மாள்வாவின் ஆதிராஜா
மாள்வாவின் இராஜாதி ராஜா
நிறுவிய
ஆண்டு
350
நிறுவனர்ஜெயவர்மன்
கலைப்பு545
படிமம்:Aulikara in the Risthal inscription.jpg
இரிஷ்தல் கல்வெட்டுகளில் காணப்படும் “ஔலிகாரர்” (பிற்கால பிராமி எழுத்துமுறை என்ற சொல்: “ஔ-லி-கா-ரா”) . முதல் எழுத்தான “ஔ” என்பது 6-7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு பாணியின் மாறுபாடு ஆகும்.[1]

ஔலிகாரர்கள் ( Aulikaras ), கி.பி 4 ஆம் நூற்றாண்டுக்கும் கி.பி 6 ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் மாள்வா இராச்சியத்தை ஆண்ட ஒரு பண்டையக் குலமாகும்.

கல்வெட்டு கண்டுபிடிப்புகள் இரண்டு அரச வம்சாவளியினரை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளன. அவர்கள் தங்களை “ஔலிகாரர்கள்” என்று அழைத்துக் கொண்டு தசபுரத்திலிருந்து (இன்றைய மண்டோசோர் ) ஆட்சி செய்தனர். தசபுரத்திலிருந்து ஆட்சி செய்த முதல் அரச வம்சத்தில், ஜெயவர்மன், சிம்மவர்மன், நரவர்மன், விசுவவர்மன் மற்றும் பந்துவர்மன் ஆகியோர் அடுத்தடுத்த வரிசையில் ஆட்சி செய்தனர். 1983 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இரிஷ்தல் கல்வெட்டு, துருமவர்தனன், ஜெயவர்தனன், அஜிதவர்தனன், விபீஷணவர்தனன், இராஜ்யவர்தனன் மற்றும் தோரமணனைத் தோற்கடித்த பிரகாஷதர்மன் ஆகிய மன்னர்களை வாரிசு வரிசையில் கொண்ட மற்றொரு அரச குடும்பத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. அநேகமாக, யசோதர்மனும் இந்தக் குலத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம். இவர் பிரகாஷதர்மரின் மகனும் வாரிசும் ஆவார்.[2] [3] யசோதர்மன் மிகிரகுலத்தைத் தோற்கடித்து மால்வா பகுதியை ஹூணர்களிடமிருந்து விடுவித்தார். மால்வா மீதான ஔலிகாரர்களின் ஆட்சி அவரோடு முடிவுக்கு வந்தது.[4]

தோற்றம்

ஔலிகாரர்களின் (நரவர்மனின் பீகார் கோத்ரா கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளபடி) தோற்றம் பற்றி இவர்களின் கல்வெட்டுகளில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இவர்களின் முதல் அரச குடும்பம் குப்தர்களின் கீழ் நிலப்பிரபுத்துவமாக இருந்தபோதிலும், இவர்களின் அனைத்து கல்வெட்டுகளிலும் குப்தர் சகாப்தத்தைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக விக்ரம் நாட்காட்டியைப் பயன்படுத்தியதன் அடிப்படையில், வரலாற்றாசிரியர் தினேஷ்சந்திர சர்கார் இவர்களை மாளவர்களின் குலமாகக் கருதினார். இந்தக் குலம் பஞ்சாப் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்தபோது தசேரகா பகுதியில் (இன்றைய மேற்கு மால்வா) குடியேறியது. அவரது கருத்தை வரலாற்றாசிரியர்கள் கே.கே.தாஸ்குப்தா மற்றும் கே.சி.ஜெயின் ஆகியோர் ஆதரித்தனர்.[5]

முதல் அவுலிகார வம்சம்

Map
முதல் ஔலிகாரா வம்சத்தால் வெளியிடப்பட்ட கல்வெட்டுகள் கண்டறியப்பட்ட இடங்கள்.

முதல் ஔலிகார அரச குடும்பத்தைப் பற்றிய ஆரம்பகால தகவல்கள் நரவர்மனின் இரண்டு கல்வெட்டுகளிலிருந்து அறியப்படுகின்றன. விக்ரம் நாட்காட்டி 461 (கி.பி 404) தேதியிட்ட மாண்டோசோர் கல்வெட்டு மற்றும் விக்ரம் நாட்காட்டி 474 (கி.பி 417) தேதியிட்ட பீகார் கோத்ரா கல்வெட்டு (நவீனகால மத்தியப் பிரதேசத்தின் ராஜ்கர் மாவட்டம் ). இந்தக் குலத்தின் நிறுவனர் ஜெயவர்மன் என அறிய வருகிறது. அவருக்குப் பிறகு அவரது மகன் சிம்மவர்மன் அரியணை ஏறினார். அவர் தன்னை ஒரு சிதிஷா (மன்னன்) என்று குறிப்பிடப்படுகிறார். அவரது மகனும் வாரிசுமான நரவர்மன் தன்னை ஒரு பார்த்திபன் (ராஜா) மற்றும் மகாராஜா என்று குறிப்பிடுகிறார். சிம்மவிக்ராந்தகாமி (சிங்கத்தின் அடியையொட்டி நகரும் ஒருவர்) என்பதும் அவரது அடைமொழியாகும்.

படிமம்:Gangdhar inscription of Visvavarman.jpg
விஸ்வவர்மனின் கங்காதர் கல்வெட்டு .

நரவர்மனுக்குப் பிறகு அவரது மகன் விசுவவர்மன் ஆட்சிக்கு வந்தார். அவர் விக்ரம் நாட்காட்டி 480 (423 கி.பி) தேதியிட்ட விசுவவர்மனின் கங்காதர் கல் கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறார். கங்காதர் கல்வெட்டு அவரது மந்திரி மயூரக்சகனால் சப்தகன்னியர்களுக்கு கோயில் ஒன்று கட்டப்பட்டதை பதிவு செய்கிறது. மயூரக்‌சகன் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கோயிலையும் கட்டினார். விசுவவர்மனுக்குப் பிறகு அவரது மகன் பந்துவர்மன் ஆட்சிக்கு வந்தார். விக்ரம் நாட்காட்டி 529 (கி.பி 473) தேதியிட்ட பட்டு நெசவாளர்களின் மண்டோசோர் கல்வெட்டில் கவிஞர் வத்சபட்டி இவரைப் புகழ்ந்து எழுதியுள்ளார். இந்தக் கல்வெட்டு, அவர் குப்தப் பேரரசரான முதலாம் குமாரகுப்தரின் கீழ் நிலப்பிரபுத்துவ மன்னராக இருந்தார் என்பதை நமக்குத் தெரிவிக்கிறது. அவரது ஆட்சிக் காலத்தில், விக்ரம் நாட்காட்டி 493 (கி.பி. 436) இல் தசபுரத்தில் பட்டு நெசவாளர்களால் சூரியனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கோயில் கட்டப்பட்டது.[6][7] இந்தக் கோயில் கி.பி 473 இல் அதே நெசவாளர்களால் புதுப்பிக்கப்பட்டது.

இடைக்காலக் காலம்

பந்துவர்மனுக்குப் பிறகு தசபுரத்தின் வரலாறு தெளிவற்றதாகவே இருக்கிறது. இரவிலா என்பவர் எழுதிய விக்ரம் நாட்காட்டி 524 (கி.பி 467) தேதியிட்ட மாண்ட்சோர் கல்வெட்டு, குப்தர்களின் எதிரிகளை தோற்கடித்த பிரபாகரன் என்ற தசபுர மன்னரைப் பற்றி குறிப்பிடுகிறது. தத்தபட்டர் என்பவர் இவரது படைத் தளபதியாக இருந்துள்ளார். இலோகோத்தர விகாரைக்கு இவர் அளித்த நன்கொடைகள் இந்தக் கல்வெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளன. பிரபாகரனுக்குப் பிறகு விரைவில், மற்றொரு இரண்டாவது ஔலிகார வம்சம் ஆட்சிக்கு வந்துள்ளது. இது பற்றி இரிஷ்டல் கல்வெட்டிலிருந்து நாம் அறியலாம்.[8] இந்த இரண்டு அரசக் குலங்களுக்கும் இடையிலான சரியான உறவு உறுதியாகத் தெரியவில்லை.

இரண்டாவது அவுலிகார வம்சம்

1983 ஆம் ஆண்டு சீதாமாவ் அருகே உள்ள ரிஸ்தலில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கல்வெட்டு, ஔலிகாரக் குடும்பத்திற்குச் சொந்தமான மற்றொரு அரசக் குலத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. விக்ரம் நாட்காட்டி 572 (கி.பி 515) தேதியிட்ட இந்தக் கல்வெட்டு, கக்காவின் மகன் கவிஞர் வசுலாவால் தூய சமசுகிருதத்தில் எழுதப்பட்டுள்ளது. இதில் பயன்படுத்தப்பட்ட எழுத்துமுறை, 5-6 ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த குப்தர் எழுத்துமுறையைச் சேர்ந்தது. முந்தைய அரசக் குடும்பத்தைப் போலன்றி, இந்த அரசக் குடும்பமானது ஒருபோதும் குப்தர்களின் கீழ் நிலப்பிரபுத்துவமாக இருந்ததில்லை. இரிஷ்தல் கல்வெட்டு இந்தக்குடும்பத்தின் நிறுவனர் என துருமவர்தனனைக் குறிப்பிடுகிறது. அவர் சேனாபதி என்ற பட்டத்தை வைத்துக் கொண்டார். அவருக்குப் பிறகு அவரது மகன் ஜெயவர்தனன் ஒரு வலிமையான படையை நிறுவி அதற்கு தலைமை தாங்கி ஆட்சிக்கு வந்தார். அவருக்குப் பிறகு அவரது மகன் அஜிதவர்தனன் அரியணை ஏறினார். இரிஷ்தல் கல்வெட்டின்படி, அவர் தொடர்ந்து சோம யாகங்களைச் செய்வதில் ஈடுபட்டிருந்தார். அஜிதவர்தனைத் தொடர்ந்து அவன் மகன் விபீஷணவர்தனன் ஆட்சிக்கு வந்தான். அவனது உன்னத குணங்களுக்காக இரிஷ்டல் கல்வெட்டில் அவர் பாராட்டப்பட்டுள்ளார். விபீஷணவர்தனுடைய மகனும், வாரிசுமான இராஜ்யவர்தனும் தனது பரம்பரை இராச்சியத்தை விரிவுபடுத்தினார். இராஜ்யவர்தனைத் தொடர்ந்து அவரது மகன் பிரகாஷதர்மன் ஆட்சிக்கு வந்தார். [9]

பிரகாஷதர்மன்

படிமம்:Toramana portrait from coin.jpg
அல்கான் ஹூனர்களின் ஆட்சியாளர் தோரமணனைத் கி.பி 515 இல் பிரகாஷதர்மன் தோற்கடித்ததாக இரிஷ்தல் கல்வெட்டின் மூலம், அறியப்படுகிறது.

பிரகாஷதர்மன் இந்த வம்சத்தின் குறிப்பிடத்தக்க மன்னராக இருந்துள்ளார். இவர் ஆதிராஜா என்ற பட்டத்தை வைத்துக் கொண்டார். இரிஷ்தல் கல்வெட்டு இவரது சாதனைகள் பற்றிய தகவல்களை நமக்குத் தருகிறது. இது பிரகாசதர்மனின் கீழ் ஆட்சியாளராக இருந்த பகவத் தோசன் என்பவர் இரிஷ்தலில் ஒரு குளனு ஒரு சிவன் கோவிலும் கட்டியதைப் பதிவு செய்கிறது. இந்தக் கல்வெட்டு, பிரகாஷதர்மன்ஹுன ஆட்சியாளர் தோரமணனைத் தோற்கடித்து, அவரது முகாமைச் சூறையாடி, அவரது அரண்மனைப் பெண்களைக் கடத்தியதாகக் குறிப்பிடுகிறது. இவரது ஆட்சிக் காலத்தில் இரிஷ்தலில் கட்டப்பட்ட குளம் இவரது தாத்தாவின் நினைவாக விபீஷணசாரர் என்று பெயரிடப்பட்டது. இவர் தசபுரத்தில் பிரம்மாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கோயிலையும் கட்டினார். [9] 1978 ஆம் ஆண்டு உஜ்ஜைனியில் உள்ள விக்ரம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விட்ணு சிறிதர் வாகங்கர் தலைமையிலான குழுவினரால் மண்டோசோரில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டபோது, ஸ்ரீ பிரகாஷ்தர்மா என்ற பெயர் பொறிக்கப்பட்ட அவரது இரண்டு கண்ணாடி முத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவருக்குப் பிறகு அவரது மகன் யசோதர்ம விஷ்ணுவர்மன் ஆட்சிக்கு வந்துள்ளார்.[9]

தேதியிடப்படாத துண்டு துண்டான மண்ட்சோர் கல்வெட்டு, ஒரு மேலாட்சி ஆட்சியாளர் ஆதித்யவர்தனன் மற்றும் அவரது நிலப்பிரபுத்துவ மகாராஜா கௌரி ஆகியோரின் பெயரையும் குறிப்பிடுகிறது. சமீபத்தில் ஆதித்யவர்தனனை வரலாற்றாசிரியர் அஸ்வினி அகர்வால் பிரகாஷதர்மனுடன் அடையாளம் கண்டுள்ளார். [10] மித்ரசோமனின் மகன் பிரமரசோமனால் எழுதப்பட்ட விக்ரம் நாட்காட்டி 547 (கிபி 490) தேதியிட்ட சோட்டி சத்ரி கல்வெட்டு, ஆதித்யவர்தனனின் நிலப்பிரபுத்துவ ஆட்சியாளரான மகாராஜா கௌரியின் வம்சாவளியைக் கூறுகிறது. இந்த மனவயானி சத்திரியக் குடும்பத்தின் முதல் ஆட்சியாளர் புண்யசோமன் ஆவார். அவருக்குப் பிறகு அவரது மகன் ராஜ்யவர்தனன் அரியணை ஏறினார். ராஷ்டிரவர்தனன் ராஜ்யவர்தனனின் மகன். ராஷ்டிரவர்தனுடைய மகனும் வாரிசும் யசோகுப்தா. இந்தக் குடும்பத்தின் கடைசி ஆட்சியாளரான கௌரி, யசோகுப்தரின் மகனாவார். அவர் தனது இறந்த தாயின் புண்ணியத்திற்காக தசபுராவில் ஒரு குளத்தை தோண்டினார். [11] இந்தக் கல்வெட்டில் கோபதா என்ற இளவரசரின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் கௌரியுடனான அவரது உறவு தெரியவில்லை. [10]

யஷோதர்மன்

படிமம்:The defeat of the Ephalites, or White Huns A.D. 528.jpg
ஹெப்தலைட்டுகள் என்ற வெள்ளை ஹூணர்களை போரில் வென்ற யசோதர்மன், ஆண்டு கி பி 528

யசோதர்ம விஷ்ணுவர்த்தனன், இந்த வம்சத்தின் மிக முக்கியமான மன்னர் ஆவார். யசோதர்மனின் இரண்டு ஒத்த தேதியிடப்படாத மண்டோசோர்வெற்றித் தூண் கல்வெட்டுகள் (இன்றைய மண்டோசோர் நகரத்திற்கு அருகிலுள்ள சோண்டானியில் காணப்படுகின்றன) மற்றும் விக்ரம் நாட்காடி 589 (கிபி 532) தேதியிட்ட ஒரு கல்வெட்டு ஆகியவை இவரது இராணுவத்தின் சாதனைகளைப் பதிவு செய்கின்றன. [12] இந்தக் கல்வெட்டுகள் அனைத்தும் முதன்முதலில் ஜான் பெய்த்ஃபுல் பிளீட் என்பவரால் 1886 இல் வெளியிடப்பட்டன. கக்காவின் மகனான கவிஞர் வசுலாவால் எழுதப்பட்ட தேதியிடப்படாத தூண் கல்வெட்டுகள், இவரது பாதங்களை ஹுன ஆட்சியாளர் மிகிரகுலன் வணங்கியதாகக் கூறுகின்றன. கிழக்கில் பிரம்மபுத்ரா அருகே இருந்தும், தெற்கில் கிழக்கு தொடர்ச்சி மலைகள் முதல், வடக்கில் இமயமலை வரையிலும், மேற்கில் அரபிக்கடல் வரையிலும் இருந்த இவரது நிலப்பிரபுக்கள் இவருக்கு அடங்கியிருந்தாக இவை கூறுகின்றன. [9] [13] இவர் ராஜாதிராஜா மற்றும் பரமேஸ்வரா என்ற பட்டங்களை வைத்துக்கொண்டார். [9] யசோதர்மனின் கி.பி 532 தேதியிட்ட கல்வெட்டு ஒன்றில், இவரது ஆட்சியாளரான நிர்தோசன் என்பவர், விந்திய மலை மற்றும் ஆரவல்லி ஆகிய மலைத்தொடர்களுக்கு இடையேயான பகுதியை ஆட்சி செய்து வந்தார் என்றும், அவரது தலைநகர் தசபுரம் என்றும் நமக்குத் தெரிவிக்கிறது. அநேகமாக ஔலிகர்களின் ஆட்சி யசோதரமனுடன் முடிவடைந்திருக்கலாம் [11]

மாண்டோசோர் வெற்றித் தூண் கல்வெட்டுகளின் 5வது வரியில், யசோதர்மன் தனது எதிரிகளை வென்று, பிரம்மபுத்ரா ஆற்றின் சுற்றுப்புறத்திலிருந்து "மேற்குப் பெருங்கடல்" (மேற்கு இந்தியப் பெருங்கடல் ) வரையிலும், இமயமலையிலிருந்து மகேந்திர மலை வரையிலும் உள்ள பகுதியைக் கட்டுப்படுத்தியதாகவும் கூறுகிறது.

இருப்பினும் இவரது குறுகிய கால பேரரசு இறுதியில் கி.பி 530-540 க்கு இடையில் சிதைந்தது.

ஔலிகாரர்களின் வாரிசுகள்

படிமம்:Chittorgarh fragmentary inscriptions of the Naigamas, first half of the 6th century CE.jpg
6 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில், நைகாமர்களின் சித்தோர்கர் கோட்டையில் காணப்பட்ட துண்டு துண்டான கல்வெட்டுகள். [14] [15]

1979 ஆம் ஆண்டு உஜ்ஜயினியின் விக்ரம் பல்கலைக்கழக குழுவினரால் மண்டோசோர் அகழ்வாராய்ச்சியின் போது, ஒரு கட்டிடத்தின் அடித்தளத்திலிருந்து, இதுவரை அறியப்படாத ஆட்சியாளர் குமாரவர்மனின் துண்டு துண்டான, தேதியிடப்படாத கல்வெட்டு கிரிஜா சங்கர் ரன்வால் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. பழங்கால பிராமி எழுத்து முறையில் செதுக்கப்பட்டுள்ள இது , யக்ஞதேவன், வீரசோமன், அவரது மகன் பாஸ்கரவர்மன் மற்றும் அவரது மகன் குமாரவர்மன் ஆகிய நான்கு தொடர்ச்சியான ஆட்சியாளர்களைக் கொண்ட ஒரு வம்சத்தைப் பதிவு செய்கிறது. [16] வரலாற்றாளர் வகாங்கர் இவர்களை ஔலிகாரர்கள் என்று குறிப்பிடுகிறார். மேலும் வி.வி. மிராஷி இந்த வம்சத்தை தனி வம்சமாகக் கூறுகிறார். இவர்கள் ஔலிகாரர்களை தோற்கடித்து வெற்றி பெற்றனர். ஆனால் இந்தக் கோட்பாடுகள் எதுவும் மற்ற வரலாற்றாசிரியர்களிடமிருந்து ஆதரவைப் பெறவில்லை. காலச்சூரி மன்னர்கள் கிருஷ்ணராஜனும் அவரது மகன் சங்கரகனனும் இவர்களுக்குப் பிறகு உடனடியாக அதே பகுதியை ஆட்சி செய்தவர்களாக அறியப்படுவதால், ஔலிகர்களுக்குப் பிறகு காலச்சூரிகள் வந்திருக்கலாம். [16] மைத்ரகர்களும் ஔலிகர்களின் வாரிசுகளாக இருந்திருக்கலாம். [17]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. Vowels according to Prinsep
  2. Agarwal, Ashvini (1989). Rise and Fall of the Imperial Guptas, Delhi:Motilal Banarsidass, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-208-0592-5, pp.250-6
  3. Salomon, Richard (1989). "New Inscriptional Evidence For The History Of The Aulikaras of Mandasor". Indo-Iranian Journal 32 (1): 12. doi:10.1163/000000089790082971. பன்னாட்டுத் தர தொடர் எண்:0019-7246. 
  4. Jain, Kailash Chand (1972). Malwa Through the Ages. Delhi: Motilal Banarsidass. pp. 250–9. ISBN 978-81-208-0824-9.
  5. Ojha, N.K. (2001). The Aulikaras of Central India: History and Inscriptions, Chandigarh: Arun Publishing House, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-85212-78-3, pp.25-7
  6. Agarwal, Ashvini (1989). Rise and Fall of the Imperial Guptas, Delhi:Motilal Banarsidass, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-208-0592-5, pp.250-6
  7. Salomon, Richard (1989). "New Inscriptional Evidence For The History Of The Aulikaras of Mandasor". Indo-Iranian Journal 32 (1): 12. doi:10.1163/000000089790082971. பன்னாட்டுத் தர தொடர் எண்:0019-7246. 
  8. Agarwal, Ashvini (1989). Rise and Fall of the Imperial Guptas, Delhi:Motilal Banarsidass, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-208-0592-5ISBN 81-208-0592-5, pp.250-6
  9. 9.0 9.1 9.2 9.3 9.4 Agarwal, Ashvini (1989). Rise and Fall of the Imperial Guptas, Delhi:Motilal Banarsidass, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-208-0592-5ISBN 81-208-0592-5, pp.250-6
  10. 10.0 10.1 Ojha, N.K. (2001). The Aulikaras of Central India: History and Inscriptions, Chandigarh: Arun Publishing House, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-85212-78-3, pp.37-41
  11. 11.0 11.1 Jain, Kailash Chand (1972). Malwa Through the Ages. Delhi: Motilal Banarsidass. pp. 250–9. ISBN 978-81-208-0824-9.Jain, Kailash Chand (1972). Malwa Through the Ages. Delhi: Motilal Banarsidass. pp. 250–9. ISBN 978-81-208-0824-9.
  12. Ojha, N.K. (2001). The Aulikaras of Central India: History and Inscriptions, Chandigarh: Arun Publishing House, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-85212-78-3, pp.19-20
  13. Salomon, Richard (1989). "New Inscriptional Evidence For The History Of The Aulikaras of Mandasor". Indo-Iranian Journal 32 (1): 11. doi:10.1163/000000089790082971. பன்னாட்டுத் தர தொடர் எண்:0019-7246. 
  14. Balogh, Dániel (9 December 2018). "Chittorgarh fragmentary inscriptions of the Naigamas, inked rubbing". doi:10.5281/zenodo.2105017.
  15. Epigraphia Indica Vol 34. pp. 53–58.
  16. 16.0 16.1 Ojha, N.K. (2001). The Aulikaras of Central India: History and Inscriptions, Chandigarh: Arun Publishing House, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-85212-78-3, pp.106-8
  17. Salomon, Richard (1989). "New Inscriptional Evidence For The History Of The Aulikaras of Mandasor". Indo-Iranian Journal 32 (1): 30. doi:10.1163/000000089790082971. பன்னாட்டுத் தர தொடர் எண்:0019-7246. 

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=ஔலிகாரர்கள்&oldid=309326" இலிருந்து மீள்விக்கப்பட்டது