கப்பச்சம்பா
| கப்பச்சம்பா |
|---|
| பேரினம் |
| ஒரய்சா |
| இனம் |
| ஒரய்சா சாட்டிவா |
| வகை |
| பாரம்பரிய நெல் வகை |
| காலம் |
| 160 - 165 நாட்கள்[1] |
| மகசூல் |
| எக்டேருக்கு சுமார் 1500 கிலோ |
| தோற்றம் |
| பண்டைய நெல் வகை |
| மாநிலம் |
| தமிழ் நாடு |
| நாடு |
கப்பச்சம்பா (Kappa Samba) என்று அழைக்கப்படும் இந்த நெல் வகை, தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல் வகையாகும். இட்லி தோசைக்கு ஏற்ற இரகமாக உள்ள இதன் தானியம், தடித்தும், (மோட்டா இரகம்) அரிசி சிவப்பு நிறத்திலும் காணப்படுகிறது.[1]
காலம்
நீண்ட கால அளவில் அறுவடைக்கு தயாராகும் இந்த நெல் வகை, 160 - 165 நாட்களில் முதிர்வடைவதாக கூறப்படுகிறது. சம்பா பருவத்தில் நடவு செய்யக்கூடிய இந்நெல் இரகம், நாற்றங்கால் வயது 40 நாட்களாக உள்ளது.[1]
சாகுபடி
நாற்று விட்டு நடவு முறையில் சாகுபடி செய்யப்படும் இது, களிமண் மற்றும் மணல் கலந்த களிமண் பாங்கான நிலங்களில் பயிரிட ஏற்றதாக கூறப்படுகிறது. மேலும் பூச்சி மற்றும் நோய் எதிர்ப்புத் தன்மையுடனான கப்பச் சம்பா,[2] பூக்கும் பருவத்தில் நெற்கதிர்களின் நெல் நுனியில் ஊசிப் போன்ற வெள்ளை நிற முட்கள் காணப்படுவதாகவும், நெல்மணிகள் முதிர்வடையும் நிலையில் அது உதிர்ந்து விடுவதாகவும் கருதப்படுகிறது.[1]
மகசூல்
சராசரியாக 121.6 சதமமீட்டர் உயரமும், அதிகபட்சமாக 131.1 சதமமீட்டர் உயரமும் வளரக்கூடிய இந்த இரக நெற்கதிர்களின் நீளம், 21.2 - 22.0 சதமமீட்டராகவும், நெற்கதிரில் உள்ள நெல்மணிகளின் எண்ணிக்கை 147 - 170 என கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் ஆயிரம் நெல்மணிகளின் எடை 23.878 கிராம் உள்ள இந்நெல் வகை, நெல்லின் மகசூல் ஒரு எக்டேருக்கு சராசரியாக 1,500 கிலோவாகவும் (20 மூடைகள்), வைக்கோலின் மகசூல் 1,500 (20 கட்டுகள்) கிலோவாகவும் உற்பத்தித் திறன் கொண்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.[1]
நெல்மணியின் இயல்பு
கப்பச்சம்பாவின் நெல்மணிகளின் இயல்பானது, பூக்கும் பருவத்தில் பச்சை நிறமாகவும், பால்பிடிக்கும் நேரத்தில் பச்சை நிறத்தில் கருமை நிற வார்ப்புகளுடனும், முதிர்ச்சிப் பருவத்தில் மஞ்சள் நிறமாகவும் காணப்படும்.[1]
சான்றுகள்
- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "பாரம்பரிய நெல் இரகங்கள் - பக்கம் 10-11" (PDF). nammanellu.com (தமிழ்) - சனவரி 2001. Retrieved 2025-07-09.
- ↑ "CLIMATE AND VARIETIES". agritech.tnau.ac.in (ஆங்கிலம்) - © 2009-16 TNAU. Retrieved 2025-07-10.