யுகத்தா

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
படிமம்:Himeji Yukata Matsuri 2009p1 006.jpg
ஆண்கள் மற்றும் பெண்கள் அணியும் யுகத்தாக்கள்
படிமம்:How to Put on a Woman's Yukata.webm
பெண்களின் யுகத்தாவை அணிவது எப்படி?

யுகத்தா (浴衣) எனப்படுவது, முறைசாராத, கோடை காலத்தில் அணியப்படும் ஒரு சப்பானிய உடை. இது ஒருவகையான கிமோனோவே. ஆனால், கிமோனோ பட்டுத் துணியால் செய்யப்படுகிறது.[1] இது பருத்தித் துணி, அல்லது செயற்கைக் துணி வகைகளால், உட்புறம் துணி வைக்காமல் தைக்கப்படுகின்றன. யுகத்தாக்களை ஆண்களும் பெண்களும் அணிகின்றனர். ஏனைய சப்பானிய உடைகளைப் போலவே யுகத்தாக்களும் நேர்ப் பொருத்துக்களும், அகன்ற கைகளும் கொண்டவை. ஆண்களின் யுகத்தாக்களின் கை நீட்சி, பெண்களின் யுகத்தாக்களின் கை நீட்சியை விடக் குறைவாக இருப்பது ஒரு வேறுபாடு. ஆண்கள் அணியும் யுகத்தாக்களின் கை நீட்சி 10 சதம மீட்டர் வரையும், பெண்கள் அணியும் யுக்தாக்களின் கைநீட்சி 20 சதம மீட்டர் வரையும் இருக்கும். ஒரு முழுமையான யுகத்தா ஆடைத் தொகுதி, ஒரு பருத்தி உள்ளாடை, யுகத்தா, ஒபி, வெறுங்கால் அல்லது கேதா (காலணி), மடிக்கத்தக்க அல்லது நிலைத்த விசிறி, கிஞ்சாக்கு எனப்படும் கைப்பை என்பவற்றை உள்ளடக்கியது. பல வகைத் தனிப்பட்ட சிறிய பொருட்களைக் கொண்டு செல்வதற்காக, கிஞ்சாக்கை ஆண்களும் பெண்களும் பயன்படுத்துகின்றனர். ஆண்கள் சில வேளைகளில் வெய்யிலில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக ஒருவகைத் தொப்பியை அணிவதுண்டு. யுகத்தா என்னும் சொல்லின் நேரடிப் பொருள் "குளியல் ஆடை" என்பதாகும். ஆனாலும், நடைமுறையில் இது குளித்தபின் உடுப்பதற்காக மட்டும் பயன்படுத்தப்படுவது அல்ல. வெப்பமான கோடையில் யுகத்தாக்கள் சப்பானில் மிகப் பொதுவாகப் பயன்பாட்டில் உள்ள உடை.

மரபுவழியாக யுகத்தாக்கள் கருநீலச் சாயமிடப்பட்ட பருத்தித் துணியிலேயே தைக்கப்பட்டன. ஆனால், தற்காலத்தில் பல வகையான நிறங்களுடனும், அலங்காரங்களுடனும் கூடிய யுகத்தாக்கள் கிடைக்கின்றன. கிமோனாக்களைப் போலவே யுகத்தாக்கள் தொடர்பிலும் பொதுவான சில விதிகள் நடைமுறையில் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. இளம் பெண்களும் ஆண்களும் பிரகாசமான நிறங்களிலும், தெளிவான அலங்காரங்களுடனும் யுக்தாக்களை அணிகின்றனர். சற்று வயது கூடியவர்கள் கடுமையான நிறங்களையும், மங்கலான அலங்காரங்களையும் பயன்படுத்துகின்றனர். சிறுவர்கள் பல நிறத் துணிகளையும் இளம் பெண்கள் பூக்கோலத் துணிகளையும் பயன்படுத்தக்கூடும். சற்று வயதான பெண்கள் மரபுவழியான கடும் நீல நிறத்தையும், வடிவவியல் கோலத் துணிகளையும் தெரிவு செய்வர். ஆண்கள் பொதுவாகத் தனிக் கடும் நிறத்தை விரும்புவர். 1990களில் இருந்து யுகத்தா உடை மறுமலர்ச்சி கண்டுள்ளது.

அனபி எனப்படும் வாணவேடிக்கை, பொன்-ஒடோரி விழா போன்ற வெளியில் நடைபெறும் கோடை நிகழ்வுகளில் யுகத்தாவை அணிவது வழக்கம். ரையோக்கான் எனப்படும் சப்பானிய விடுதிகளில் குளித்ததன் பின்னர் யுகத்தாவை அணிகின்றனர்.

வழக்கங்கள்

படிமம்:Yukata tokyo.JPG
யுகத்தா அணிந்த ஒரு பெண். ஒபி, விசிறி ஆகியவற்றைக் காட்டும் பின்புறப் படம்.

யுகத்தாவைக் கைகளூடாக மாட்டிய பின்னர், அதன் இடது பக்கத்தை வலது பக்கத்தின் மேலாக எடுத்துச் சுற்றுவர். இறப்பு வீட்டில் இறந்தவருக்கு உடை அணிவிக்கும்போது மட்டுமே இது மறுபுறமாக அணிவிக்கப்படுகிறது. சுற்றப்படும் யுகத்தா, வயிற்றுப் பகுதியைச் சுற்றி அணியப்படும் ஒபி எனப்படும் அகலமான நாடா மூலம் கட்டப்படும். இந்த நாடாவின் முனைகள் ஒரு பூ வடிவில் முடிச்சிடப்படும். மரபு வழியாக இந்த முடிச்சு முதுகுப் பக்கத்திலேயே இருக்கும். இந்த முடிச்சு முன்புறத்தில் இருந்தால் அது விபச்சாரியைக் குறிக்கும். தனியாக இருக்கும்போது, எடுத்துக்காட்டாக குளியலின் பின்னர் யுகத்தா வெறுமனே நாடாவால் கட்டப்படுவது உண்டு. யுகத்தாவைக் கேதா எனப்படும் மரத்தாலான காலணியுடன் அணிவது வழக்கம். ஆனால், பெரும்பாலும் காலுறை அணியும் வழக்கம் இல்லை.

வரலாற்றில் யுகத்தா

ஈயான் காலத்தில் (794-1185) அரசவைப் பிரபுக்கள் குளித்ததின் பின்னர் சுற்றிக்கொள்வதற்கு யுகத்தாவைப் பயன்படுத்தினர். இதைப் பின்னர் சப்பானியப் போர்வீரர்களும் அணிந்தனர். ஏடோ காலத்தில் (1600–1868) சப்பானில் பொதுக் குளியல் நிலையங்கள் பொழுதுபோக்கு இடங்களாகப் பிரபலமானபோது யுகத்தாவைப் பொது மக்களும் அணியத் தொடங்கினர்.[2]

மேற்கோள்கள்

  1. "கிமோனோ கெய்சா டாட் கொம்". Archived from the original on 2015-11-13. Retrieved 2015-11-27.
  2. "கோ சப்பான் கோ இணையத்தளம்". Archived from the original on 2015-11-18. Retrieved 2015-11-27.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=யுகத்தா&oldid=480210" இலிருந்து மீள்விக்கப்பட்டது