வே. ஆனைமுத்து

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
பெரியார் பெருந்தொண்டர்
வே. ஆனைமுத்து
படிமம்:Anaimuthu.jpg
2015-ஆண்டுவாக்கில் ஆனைமுத்து
பொதுச்செயலாளர்,
மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி
பதவியில்
13 மார்ச் 1988 – 6 ஏப்ரல் 2021
முன்னையவர்பதவி உருவாக்கம்
பின்னவர்தி. துரை சித்தார்த்தன்
பொதுச்செயலாளர்,
பெரியார் சம உரிமைக் கழகம்
பதவியில்
8 ஆகத்து 1976 – 13 மார்ச் 1988
முன்னையவர்பதவி உருவாக்கம்
பின்னவர்அவரே (மா.பெ.பொ.க)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு21 சூன் 1925
முருக்கன்குடி, பிரிக்கப்படாத திருச்சினாப்பள்ளி மாவட்டம்,
மதராசு தலைமாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போது
பெரம்பலூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா)
இறப்பு6 April 2021(2021-04-06) (aged 95)[1]
புதுச்சேரி, இந்தியா
குடியுரிமைஇந்தியர்
தேசியம்தமிழர்
பிற அரசியல்
தொடர்புகள்
படிமம்:Flag of Dravidar Kazagam.svg திராவிடர் கழகம் (1960-75)
துணைவர்
  • சுசிலா (தி. 1954)
பிள்ளைகள்தமிழ்செல்வி
பன்னீர்செல்வம்
அருள்செல்வி
வெற்றி
வீரமணி
அருள்மொழி
கோவேந்தன்
பெற்றோர்பூவாயி (தாய்)
வேம்பாயி (தந்தை)
முன்னாள் மாணவர்அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
சமயம்இறை மறுப்பு

வே. ஆனைமுத்து (V. Anaimuthu, 21 சூன் 1925 – 6 ஏப்ரல் 2021) பகுத்தறிவுத் தந்தை பெரியாரின் அடியொற்றி அவரது சுயமரியாதைப் பாதையில் பெரியாரிய நெறியில் தனது இயக்கத்தைக் கட்டமைத்து ஆண்டுதோறும் சுயமரியாதை உள்ள இளைஞர்களுக்குப் பயிற்சி வகுப்பு நடத்தி இளைஞர்களைப் பெரியாரிய நெறியோடு மார்க்சிய, அம்பேத்காரிய நெறிகளையும் போதித்து வந்தவர். [2][3] இவரது நூற்றாண்டுவிழாவை ஒட்டி இவரது நூல்கள் 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் நாட்டுடமையாக்கப்பட்டு மரபுரிமையாளர்களுக்கு ரூ 10 இலட்சம் வழங்கப்பட்டது.[4]

பிறப்பும் கல்வியும்

இன்றைய பெரம்பலூர் மாவட்டம் முருக்கன்குடி எனும் சிற்றூரில் வேம்பாயி - பூவாயி அம்மாள் இணையருக்கு மூத்த மகனாக 1925 சூன் 21 அன்று பிறந்தார் ஆனைமுத்து.

1940 இல் கடலூர் மாவட்டம் வீரானந்தபுரத்தைச் சேர்ந்த ஆசிரியர் ந. கணபதியின் வழிகாட்டுதலால் பகுத்தறிவுக் கொள்கைகளை ஏற்றார்.

இன்றைய நாமக்கல் மாவட்டம் பரமத்தி-வேலூரில் உள்ள கந்தசாமி கண்டர் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது "தமிழ் மறவர்" வை. பொன்னம்பலனார் தொடர்பால் தனித்தமிழ், பெரியாரிய கொள்கைகளில் தெளிவு பெற்றார். அங்கு 1944 அக்டோபர் 11 அன்று பெரியாரின் சொற்பொழிவை நேரில் கேட்டார்.[5]

1946 முதல் 1949 வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயிலும்போது அங்கு நூலகத்தில் இருந்த தமிழ், ஆங்கில நூல்களைக் கற்று தன் அறிவை மேம்படுத்திக்கொண்டார். திராவிடநாடு, பல்லவநாடு, அணில், குமரன் ஆகிய இதழ்களில் கட்டுரையும் பாடல்களும் எழுதினார்.

செயல்பாடுகள்

இதழியல், அரசுப்பணி, போராட்டம்

பெரியார் 1949 சனவரி 14 அன்று சென்னையில் நடத்திய திருக்குறள் மாநாட்டைத் தொடர்ந்து 1950-இல் திருக்குறள் வீ. முனிசாமியை ஆசிரியராகக் கொண்டு ஆசிரியர் கணபதியும் ஆனைமுத்துவும் (துணை ஆசிரியர் மற்றும் பொறுப்பாளர்) சேர்ந்து குறள்மலர் என்னும் கிழமை இதழைத் திருச்சியில் தொடங்கினார். 25 கிழமைகளில் அவ்விதழில் 50-இற்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதினார். பின்னர், முனிசாமியுடன் ஏற்பட்ட பிணக்கால் அதில் இருந்து வெளியேறினார்.

1952-இல் அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பணிக்கு சேர்ந்தார். 1956-இல் அரசுப் பணியைத் துறந்து திருச்சிராப்பள்ளியில் குடியேறினார்.

1957 சனவரி 11 அன்று குறள் முரசு என்ற ஏட்டைத் தொடங்கினார். அதில் அரசியல் விழிப்புணர்வுக் கட்டுரைகளை எழுதிவந்தார். அவை பெரியாரால் போற்றப்பட்டு, குடிஅரசு இதழிலும் வெளியிடப்பட்டன.

1957 நவம்பர் 26 அன்று இந்திய அரசியலமைப்பு நகலை எரித்துப் போராட்டத்தில் ஈடுபட்டார். இதற்காக 18 மாதம் கடுங்காவல் தண்டனை பெற்றார்.

திராவிடர் கழகம் (1960-75)

1960-இல் மீண்டும் திருச்சியில் குடியேறி திராவிடர் கழகத்தின் (தி.க.) பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார். பொருளாதார தேவைக்காக 1963 முதல் 1975 வரை தமிழ்நாடு தனிப்பயிற்சிக் கல்லூரியை நடத்தினார். மாநிலம் முழுவதும் இயக்கப் பயிற்சி வகுப்புகளுக்கு வழிசெய்தார்.

பொறியாளர் கு. ம. சுப்பிரமணியம், நோபுள் கோவிந்தராசலு போன்றோர் துணையுடன் 1970 மார்ச்சு 7 அன்று திருச்சியில் 'சிந்தனையாளர் கழகத்தை'த் தொடங்கினார். துவக்க விழாவில் பெரியார் கலந்து கொண்டு துவக்கிவைத்தார்.

1971 முதல் 1974[6] வரை உழைத்து பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள் என்ற மூன்று தொகுதிகளை தொகுத்து சிந்தனையாளர் கழகத்தின் சார்பில் நூலாக்கினார். அத்தொகுப்பு நூல்களை 1 சூலை 1974 அன்று அப்போதைய தமிழ்நாட்டு முதலமைச்சரான மு. கருணாநிதி வெளியிட்டார்.

1973 ஆகத்து 17 அன்று திருச்சியில் பாவேந்தர் அச்சகத்தைத் தொடங்கினார். அடுத்தாண்டு அதே நாள் தொடங்கி சிந்தனையாளன் என்ற திங்களிதழைத் தன் சொந்த பொறுப்பில் வெளியிட்டார்.

பெரியாரின் மறைவுக்குப் பிறகான தி.க.வின் போக்குகளை விமர்சித்து மத்தியக்குழு உறுப்பினர்களுக்கு அச்சிட்ட அறிக்கைகளை அனுப்பியமைக்காக 1975 நவம்பர் 16 அன்று தி.க மத்தியக் குழுவில் இருந்தும், தி.க.வில் இருந்தும் நீக்கப்பட்டார்.

பெரியார் சம உரிமைக் கழகம் (1976-88)

இன்றைய மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 1976 ஆகத்து 8 அன்று சேலம் அ. சித்தையன், சீர்காழி மா. முத்துச்சாமி, ஆ.செ. தங்கவேலு, ந. கணபதி, தக்கோலம், கா.ந.ஜலநாதன் ஆகிய தோழர்களின் துணையுடன் பெரியார் சம உரிமைக் கழகம் என்ற அமைப்பைத் துவக்கினார்.

1978-இல் ஒன்றிய அரசுக் கல்வியிலும், வேலையிலும் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு கோரி அன்றைய குடியரசுத் தலைவர் நீலம் சஞ்சீவ ரெட்டியிடம் நேரில் கோரிக்கை வைத்தார். மேலும் உத்தரப் பிரதேச (உ.பி.) மாநிலம் முசாபர்நகரில் பிற்படுத்தப்பட்டோர் மாநாட்டைத் தொடங்கி வைத்தார். அதன் விளைவாக பீகார் மாநிலத்தில் முதன் முறையாகப் பிற்படுத்தப்பட்டோருக்கு 20% ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

1979-இல் தில்லியில் பெரியார் நூற்றாண்டு விழாவை அன்றைய இந்தியத் துணைத் தலைமையமைச்சர் ஜெகஜீவன்ராமை வைத்துத் தொடங்கி வைத்தார். அக் காலத்தில் ஆனைமுத்துவால் தொகுக்கப்பட்ட "தந்தைப் பெரியாரின் இடஒதுக்கீடு" கருத்துக்களின் இந்தி மொழிபெயர்ப்பு வெளியிடப்பட்டது. இடஒதுக்கீடு தொடர்பில் அன்றைய இந்தியத் தலைமை அமைச்சர் மொரார்ஜி தேசாயைச் சந்தித்தார். இடஒதுக்கீடு குறித்த விழிப்புணர்வு பரப்புரைகளைப் அசாம், பீகார், கேரளம், கருநாடகம், இராசத்தான், உ. பி., மேற்கு வங்காளம் முதலிய மாநிலங்களில் நடத்தினார். தமிழ்நாட்டில் பிற்பட்டோருக்கு 31 விழுக்காட்டிலிருந்து 60 விழுக்காடாக உயர்த்தக்கோரி அன்றைய முதல்வர் ம. கோ. இராமச்சந்திரனிடம் கோரிக்கை வைத்தார். இதன் வழியே பிற்படுத்தப்பட்டோருக்கு 50 விழுக்காடு ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

1980-இல் சிந்தனையாளனில் வெளிவந்த இவரின் கட்டுரைகள் தொகுக்கப்பட்டுப் பல நூல்களாக வெளிவந்தன. தலித்தியச் செயல்பாட்டாளர் கன்சிராம் நடத்திய அனைத்து இந்திய பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை சமூகங்களின் பணியாளர்கள் கூட்டமைப்பு (BAMCEF) கூட்டங்களில் தலைமையேற்கவும் சிறப்புரையாற்றவும் அழைக்கப்பட்டார்.

1982-இல் ஆனைமுத்துவின் பல போராட்டங்களைத் தொடர்ந்து அன்றைய உள்துறை அமைச்சர் அவரைப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தார். அதைத் தொடர்ந்து மண்டல் ஆணைக்குழு அறிக்கை, நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்டது.

மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி (1988-2021)

பெரியார் சம உரிமைக் கழகம், 13 மார்ச்சு 1988 அன்று மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி எனப் பெயர் மாற்றப்பட்டது.

1991-இல் தில்லியில் பெரியார் பிறந்தநாள் விழாக்களையும், பிற வடமாநிலங்களில் பெரியார் கொள்கைப் பரப்புரைகளையும் முன்னெடுத்தார்.

1994-இல் ஈழச் செயல்பாட்டாளர் எஸ். ஏ. டேவிட் துணையுடன் "பெரியார் ஈரா" (Periyar Era) என்ற ஆங்கிலத் திங்களிதழைத் தொடங்கினார்.

1996- திருக்குறள் மாநாட்டை நடத்தினார். பெரியார் பற்றிய சொற்பொழிவு மற்றும் ஆய்வுக்காக மலேசியா சென்றார். வட இந்தியாவின் 30 மாவட்டங்களில் இடஒதுக்கீட்டைஆதரித்துப் பரப்புரை செய்தார்.

2005-இல் மீண்டும் மலேசியாவுக்கும் அதன்பின் சிங்கப்பூர், மற்றும் இலங்கைக்கும் பயணம் செய்தார்.

படைப்புகள்

  1. பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள் 3 தொகுதிகள் - தொகுப்பாசிரியர்
  2. சிந்தனையாளர்களுக்குச் சீரிய விருந்து
  3. தீண்டாமை நால்வருணம் ஒழிப்போம்
  4. பெரியார் கொள்கைகள் வெற்றிபெற பெரியார் தொண்டர்கள் செய்ய வேண்டியது என்ன?
  5. விகிதாசார இடஒதுக்கீடு செய்! (தமிழ் மற்றும் ஆங்கிலம்)
  6. பெரியாரியல் - இரண்டு தொகுதிகள்
  7. தத்துவ விவேசினி (தொகுப்பு)
பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள் தொகுதி நூலை முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாம் பதிப்பாக கொண்டு வந்தார். மேலும் தகவலுக்கு

தனி வாழ்க்கை

1954 ஆகத்து 22 அன்று பொன்னம்பலனார் தலைமையில் கடலூர் வண்ணரப்பாளையம் ஆ. சுப்ரமணிய நாயகர் - தையல்நாயகி இணையரின் மகள் சுசிலாவைத் திருமணம் செய்திருந்தார் ஆனைமுத்து. இவர்களுக்கு தமிழ்ச்செல்வி, பன்னீர்ச்செல்வம், அருள்செல்வி, வெற்றி, வீரமணி, அருள்மொழி, கோவேந்தன் என ஏழு பிள்ளைகள் உள்ளனர்.

மறைவு

புதுச்சேரியில் 2021 ஏப்ரல் 6 அன்று மாரடைப்பால் தமது 96-ஆம் அகவையில் மறைந்தார் ஆனைமுத்து.[7][8] மறைவிற்கு முன்னர் கோவிட்-19 தொற்றால் சென்னை அரசு மருத்துவமனையில் தங்கி மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தார்.[9] அவரின் விருப்பத்தின்படி அவரது உடல் மருத்துவக் கொடையாக சென்னை போரூரில் உள்ள சிறீ இராமச்சந்திரா மருத்துவக் கல்லூரிக்கு ஏப்ரல் 7 அன்று மாலை 5:30 மணிக்கு அளிக்கப்பட்டது.

மேற்கோள்கள்

  1. மார்க்சிய, பெரியாரிய அறிஞர் வே.ஆனைமுத்து காலமானார்: ஸ்டாலின் இரங்கல். தி ஹிந்து தமிழ் நாளிதழ். 06 ஏப்ரல் 2021. {{cite book}}: Check date values in: |year= (help)CS1 maint: year (link)
  2. Muruganandham, T. (2021-04-06). "V Anaimuthu, close associate of Periyar, BC reservation crusader passes away". The New Indian Express (in ஆங்கிலம்). Retrieved 2026-03-05.
  3. பெரியாரிய இயக்கங்கள் முன்னெடுக்க வேண்டியவை... - ஆனைமுத்து பட்டியல். விகடன் இதழ். 12 ஜூலை 2020. {{cite book}}: Check date values in: |year= (help)CS1 maint: year (link)
  4. "ஈரோடு தமிழன்பன் நூல்கள் அனைத்தும் நாட்டுடைமை: முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.10 லட்சம் வழங்கினார் - Dinakaran". Dinakaran. Retrieved 2026-03-08.
  5. 96 வயது ‘பெரியாரிய அறிஞர்’ வே.ஆனைமுத்துவுக்கு கரோனா- சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை. தி ஹிந்து தமிழ் நாளிதழ். 07 டிசம்பர் 2020. {{cite book}}: Check date values in: |year= (help)CS1 maint: year (link)
  6. பெரியாரைப் புரிந்து கொள்ள உதவிய தோழர் வே. ஆனைமுத்துவின் உழைப்பு | பேரா. வீ. அரசு | Prof. V. Arasu, retrieved 2023-07-29
  7. பெரியாரிய ஆய்வாளர் வே. ஆனைமுத்து காலமானார்
  8. பிரிவு, வினவு செய்திப் (2021-04-06). "தோழர் வே.ஆனைமுத்து- வின் மறைவு சமூகத்தின் பேரிழப்பு || ம.க.இ.க அஞ்சலி". வினவு (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2023-04-10.
  9. 96 வயது ‘பெரியாரிய அறிஞர்’ வே.ஆனைமுத்துவுக்கு கரோனா- சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=வே._ஆனைமுத்து&oldid=503942" இலிருந்து மீள்விக்கப்பட்டது